காப்பி
Coffee
காப்பி அல்லது குளம்பி (இலங்கைத் தமிழ்: கோப்பி) (en:Coffee(காஃபி)) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்க்கரை சேர்காமலும் கரும் காப்பியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காப்பி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளர்) (200 மில்லி லிட்டர்) காப்பி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும் இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காப்பி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள் உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காப்பிதான். மொத்தமாக கடைவிலை மதிப்பில் (retail value) ஆண்டுக்கு 70 பில்லியன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் ஆகும். காப்பி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் சற்றேறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றது.
உரை: விக்கிப்பீடியா கட்டுரை காப்பி, CC BY-SA 4.0.
中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español · English